Jan 10
22
எஸ்.பி.எம். 12 பாடம்: கெஅடிலான் கல்வி அமைச்சரைச் சந்திக்கிறது

தமிழ், தமிழ் இலக்கியம் உட்பட்ட 12 பாடங்கள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்து கெஅடிலான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் நாளை மாலை மணி 3.00 அளவில் புத்ராஜெயாவில் கல்வி அமைச்சர் முகைதீன் யாசினைச் சந்திக்கவுள்ளனர்.
காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ். மாணிக்கவாசகம் தலைமையில் ஷாஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு காலிட் ஹசான், கிளானா ஜயா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு லோ பூன் லீ, கோத்தா ராஜா நாடளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சித்தி மரியா உட்பட கெஅடிலான் கட்சியின் மாநில, தொகுதித் தலைவர்களும் கல்வி அமைச்சரைச் சந்திக்கவுள்ளனர்.
எஸ்.பி.எம். தேர்வில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களையும் சேர்த்துப் பன்னிரண்டு பாடங்கள் என்று உறுதி செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை மாணிக்கவாச்சகம் குழுவினர் முன்வைப்பர்.
தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காவிட்டால் மாணவர்கள் இயல்பாகவே இப்பாடங்களை எடுக்க முன் வரமாட்டார்கள். இதனால் தமிழ் மொழி மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்பதை விளக்கிச் சொல்ல இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்கள் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இருக்காது. தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள். அதனால் தமிழ்ப் பள்ளிகளின் தரம் வீழ்ச்சி அடையும். இதனால் இந்தியர் தம் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். இதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகள் தாமே மரணத்தைத் தழுவும்.
தமிழ்ப் பள்ளிகள் மட்டுமன்றி தமிழ் சார்ந்த துறைகளாகிய இதழியல், வானொலி முதலிய தொடர்புத் துறைகளிலும் தமிழ் அழியும்.
தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களைப் புறக்கணிப்பதால் தமிழரின் தாய்மொழி படிப்படியாக அழிந்துவிடும். இது அம்னோ அரசின் திட்டமிட்ட ஒரு செயலாக இருக்கிறது. சிறுபான்மை மக்களின் உரிமையைப் பறிப்பதோடு அவர்களின் கலை, பண்பாட்டையும் அழிப்பது அம்னோவின் நோக்கமாக இருப்பதால் இதனைச் சிறுபான்மை மக்களின் இனத்துடைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத முடிகிறது.
ஆகவே, தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களைக் காப்பது நமது கடமை. அதற்காகக் கெஅடிலான் கடைசி வரை போராடும் என்று மாண்புமிகு எஸ். மாணிக்கவாசகம் விடுதலை மலேசியாவிடம் தெரிவித்தார்.
free malaysia today
![a Malaysia for Malaysians -
Member of Parliament, Kapar [P.109] a Malaysia for Malaysians - Member of Parliament, Kapar [P.109]](http://www.mpkapar.com/manikavasagam/wp-content/themes/intrepidity/uploads/BILLBOARD.jpg)

















